டெல்லி : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 26ம் தேதி தென் தமிழக பகுதிகளில் மிக கனமழைக்கும் தென்தமிழ்நாட்டில் நவ. 25,27ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால், படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறினால் இலங்கை மற்றும் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அவ்வாறு புயல் உருவாகினால் இந்த சீசனில் உருவாகும் இரண்டாவது புயலாகும். இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை சவுதி அரேபியா முன்மொழிந்துள்ளது. இந்த பெங்கல் (Fengal) புயலானது சென்னைக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னையை கடந்து செல்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்றும் சில வானிலை பதிவர்கள் கூறுகின்றனர்.கடலோர ஆந்திரபிரதேசம், ஏனாம் ஆகிய பகுதிகளில் நவ. 26, 27 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கேரளா, மாஹேவில் நவம்பர் 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. நிக்கோபார் தீவுகளில் நவ.22-24 வரை கனமழையும், ராயல் சிமாவில் நவ. 26, 27ல் கனமழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.