சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடையத் தொடங்கியதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 8ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் நேற்று மழை பெய்துள்ள நிலையில், ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்டது.
இதையடுத்து, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7ம் தேதி வரையில் தமிழத்தில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இதன் காரணமாக அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும்.