டெல்லி : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், கடந்த அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அக்டோபர் 20ம் தேதி முதல் நேற்று வரை இந்த பருவத்தில் இயல்பாக 30 சதவீதம் மழை பெய்ய வேண்டும். ஆனால் 25 சதவீதம் வரை மட்டும் தான் மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு. இதனிடையே குமரிக்கடல் பகுதி மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளி மண்டல காற்று சுழற்சி நீடித்து வருகிறது. அதனால், தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என்பதால் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கும் நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று தண்டையார்பேட்டையில் 6.9 செமீ, நுங்கம்பாக்கத்தில் 6.4 செமீ மழை பதிவாகி உள்ளது.