சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 6ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும். தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வந்தது.
இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை முதல் 4ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.