வால்பாறை: கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை செல்லும் வழியில் சேடல் அணை உள்ளது. இது சோலையார் அணையில் 160 அடி நீர் மட்டம் உயர்ந்தால், அணை நீர் தானாக வழிந்து பரம்பிக்குளம் அணைக்கு செல்லும் சேடல் பகுதியாகும். இங்கு சாலை பணிகளின்போது சில இடங்களில் செங்குத்தாக மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ள பல இடங்களில் கனமழை காரணமாக நேற்று அதிகாலை மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மண் மற்றும் பாறை சாலையில் விழுந்துள்ளன.
சம்பவம் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்ட 3 வீடுகளில் வசித்தவர்களை அப்புறப்படுத்தி, உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு பரபரப்பு நிலவியது. இந்நிலையில், நேற்று அப்பகுதிக்கு சென்ற வால்பாறை நகராட்சி தலைவர், தாசில்தார், நகராட்சி ஆணையர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நகராட்சி பொறியாளர் மேற்பார்வையில், பாறைகள் அகற்றப்பட்டு, முதற்கட்ட பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.