பெங்களூரு: கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கர்நாடகாவில் மழை பெய்ததால் 71 பேர் பலியான நிலையில், சராசரியை விட 197% அதிகம் மழை பெய்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த ஏப்ரல் மாதம் முதல் கர்நாடக மாநிலத்தில் பெய்த அதிகப்படியான பருவமழை காரணமாக 71 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 125 ஆண்டுகளில் மே மாதத்திலும், பருவமழைக்கு முந்தைய காலகட்டத்திலும் பதிவான மிக அதிகபட்ச மழை பெய்துள்ளது. மே மாதத்தில் வழக்கமாக 74 மி.மீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 219 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியை விட 197% அதிகமாக பதிவாகியுள்ளது. அதேபோல், மார்ச் 1 முதல் மே 31 வரையிலான பருவமழைக்கு முந்தைய காலத்தில், வழக்கமாக 115 மி.மீ மழை பெய்யும். ஆனால் தற்போது, 286 மி.மீ மழை பெய்துள்ளது.
இது சராசரியை விட 149% அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த பருவமழை காலத்தில் (மார்ச் 1 முதல் மே 31 வரை) மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசியதால், அனைத்து மாவட்டங்களிலும் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்தது. ஏப்ரல் 1 முதல் மே 31 வரை, மின்னல் தாக்குதலால் 48 பேர், மரங்கள் விழுந்ததால் 9 பேர், வீடு இடிந்ததால் 5 பேர், நீரில் மூழ்கியதால் 4 பேர், நிலச்சரிவால் 4 பேர் மற்றும் மின்சாரம் தாக்கியதால் ஒருவர் என மொத்தம் 71 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 702 விலங்குகள் இறந்ததில், 698 வழக்குகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2,068 வீடுகள் சேதமடைந்ததில், 1,926 வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 15,378.32 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மாநிலத்தின் 14 முக்கிய நீர்த்தேக்கங்களில் மே 31 நிலவரப்படி 316.01 டிஎம்சி நீர் சேமிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.