திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 6 மாதங்களுக்கு பிறகு ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வீழ்ச்சி பாறைகளில் ஏறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளதால் தமிழகமெங்கும் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த நீர்வீழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குடும்பத்துடன் குளித்து விட்டுச் செல்கின்றனர். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தற்போது நீர் வரத்து தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி புதுப்பொலிவுடன் சிறுவர்களை கவரும் வண்ணம் பூங்கா, வனவிலங்குகளின் ஓவியங்கள், உடைமாற்றும் அறை, மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க கூடாரம் உள்ளிட்டவை புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை இளைஞர் சோழராஜன் கூறுகையில், ‘ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு தற்போது தண்ணீர் கொட்டி வருகிறது. இதில் குளிக்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கும்.
மேலும் விடுமுறை நாட்களில் அதிகளவில் இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த நீர் வீழ்ச்சியின் மீது ஒரு சிலர் ஏறி அங்குள்ள மெயின் அருவியில் குளிக்க செல்கின்றனர். இது முற்றிலும் ஆபத்தானதாகும். பாறை மேல் ஏறி வழுக்கி விழுந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே நீர்வீழ்ச்சி தொடங்கும் இடத்திற்கு யாரும் செல்ல வேண்டாம். பாறைகள் மீது யாரும் ஏற வேண்டாம். மீறி ஏறினால் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.