சென்னை: வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் தொகுதி, சூளை, ராட்லர் தெருவில் உள்ள கிளை நூலகம், திருவிக.நகர் தொகுதி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகம்,ராயபுரம் தொகுதி, புதிய வண்ணாரபேட்டை, மொட்டை தோட்டம், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் கிளை நூலகம் ஆர்.கே. நகர் தொகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெரு கிளை நூலகம், புதிய வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் நூலகம், பெரம்பூர் தொகுதி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி நூலகம், துறைமுகம் தொகுதி, ஜார்ஜ் டவுன், சண்முகம் தெரு கிளை நூலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூருக்கு செல்லும் துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடப்படுகிறது என்ற எச்.ராஜா கூறியுள்ளாரோ என்று கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ‘’எச்.ராஜா காலையில் எழுந்தால் இரவு வரை இந்த ஆட்சியின் மீது பொல்லாங்கு பேசுவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளார். ஏதாவது ஒரு இடத்தில் அவரை நிரூபிக்க சொல்லுங்கள். அப்படி ஏதாவது நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். எச்.ராஜா கூறுவது அபத்தமானது. ஆட்சியின் மீது குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற காரணத்தினால் இதுபோன்ற குறைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது, புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால்தான் அவரை தமிழ்நாட்டின் பாஜ பொறுப்பாளராக வைத்துள்ளனர்.
சொல்லுகின்ற ஆளைப் பொருத்துதான் கருத்துகளுக்கு உண்டான வலுசேர்க்கப்படும். இதுபோன்ற கருத்துகளை சொல்பவர்கள் யார் என்று சிந்தியுங்கள். நீரோட்டத்தில் அடித்து செல்பவர்கள், பெருமழை பெய்தால் எப்படி குப்பையை அடித்து செல்லுமோ அதற்கு உண்டான தகுதி உடையவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’’ என்றார். ஆய்வின்போது எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஆர்.டி. சேகர். மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சென்னை பெருநகர வளர்ச்சி குழு உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சிஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.