ராவல்பிண்டி: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்துள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் அரங்கில் இப்போட்டி நேற்று காலை தொடங்குவதாக இருந்த நிலையில், இரவு பெய்த மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அப்துல்லா ஷபிக், சைம் அயூப் இணைந்து பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். ஷபிக் 2 ரன் எடுத்து ஹசன் மகமூத் பந்துவீச்சில் ஜாகிர் ஹசன் வசம் பிடிபட்டார்.
அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் (6), பாபர் ஆஸம் (0) இருவரும் ஷோரிபுல் இஸ்லாம் வேகத்தில் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் 8.2 ஓவரில் 16 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், சைம் அயூப் – சவுத் ஷகீல் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தது. அயூப் 56 ரன் (98 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹசன் மகமூத் பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் வசம் பிடிபட்டார். பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்துள்ளது. சவுத் ஷகீல் 57 ரன், முகமது ரிஸ்வான் 24 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.