சென்னை: கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று(16-10-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திண்டுக்கல், கரூரின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில் தான் தமிழ்நாட்டில் தீவிரமடைந்து மழை பெய்து வருகிறது. மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 19ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் இரு மாவட்டங்களுக்கும் இன்று(16-10-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பாலகிருஷ்ணாபுரம், நாகல்நகர், தோமையார்புரம், சவேரியார்பாளையம், சீலப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், கடலூர், கரூர், நாகை, விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், தேனி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில்காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.