குன்னூர்: குன்னூரில் நேற்று பெய்த கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக குன்னூர் சுற்று வட்டார பகுதியில், பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்வதோடு, மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 27 இடங்களில் கட்டிடங்கள் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான அருவங்காடு, பர்லியார், வெலிங்டன், காட்டேரி போன்ற பகுதியில் சுமார் 4 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அங்குள்ள கிளை நூலகத்திற்குள் செல்லும் சாலை சேதமடைந்தது. இதனிடையே அங்கிருந்த அங்கன்வாடி மையத்திற்குள் மழை நீர் புகுந்தது. அங்கன்வாடி மையத்திற்கு அருகே ஏற்பட்ட மண் சரிவு காரணமாக அங்கன்வாடி கட்டிடம் அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளது.