சென்னை: தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதுடன், 7ம் தேதி வரையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வெயில் மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் நேற்றும் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை அடுத்த பூந்தமல்லியில் 110மிமீ மழை பெய்துள்ளது.
செங்கம் 100 மிமீ, ஆர்.கே.பேட்டை, வானூர் 90மிமீ, வேங்கூர் 80மிமீ, திருத்தணி, தேவாலா, நீலகிரி, போளூர், கெடார், நெடுங்கல், திருவாடணை 70மிமீ, சங்கராபுரம், ஒட்டன்சத்திரம், முண்டியம்பாக்கம் 60மிமீ, வைகை அணை, உசிலம்பட்டி, திருவண்ணாமலை, நத்தம், விளாத்திகுளம், சென்னிமலை, கீழ்பெண்ணாத்தூர், கோவில்பட்டி, நந்தியார், திருப்பாலப்பந்தல், முகையூர், கோத்தகிரி, பொன்னமராவதி, கோவிலங்குளம், கடுவனூர், மதுரை விமான நிலையம் 50மிமீ மழை பெய்துள்ளது.
இது தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்தது. மேலும், மயிலாப்பூர், அ டையாறு, சைதாப்பேட்டை, ஆலந்தூர், நங்கநல்லூர், மீஞ்சூர், பொன்னேரி, சூளைமேடு, அமைந்தகரை, கூடுவாஞ்சேரி, வண்டலூர், நந்திவரம், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, ஆவடி, புழல், செங்குன்றம், மற்றும் தாம்பரம், சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் மழை பெய்தது. இருப்பினும், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது.
கடலூர் மாவட்டத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கோவை, கரூர், திண்டுக்கல், திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதையடுத்து கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 7ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.