Monday, February 26, 2024
Home » மழை முடிந்தும் விடாமல் துரத்தும் சளி தொல்லை: பொது இடங்களில் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.! மருத்துவர் அறிவுரை

மழை முடிந்தும் விடாமல் துரத்தும் சளி தொல்லை: பொது இடங்களில் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.! மருத்துவர் அறிவுரை

by Karthik Yash

பெரம்பூர்: சென்னையில் மழை முடிந்தும் விடாது துரத்தும் சளி தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, பொது இடங்களில் சுகாதாரத்துடன் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒவ்வொரு கால நிலை மாற்றத்தின்போதும், அதற்கு ஏற்ப நோய் தாக்குதலை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மழை காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை மக்கள் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டு வந்தனர். இருமல் பாதிப்பு உள்ளவர்கள் மருந்து எடுத்துக்கொண்டாலும், 10 நாட்களுக்கு மேல் இந்த பாதிப்பு இருந்தது. அதனை தொடர்ந்து, சமீபத்தில் பெய்த கனமழையால் பலர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்காக மாநகராட்சி சார்பில், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மழை நின்று 2 வாரத்திற்கு மேலாகியும் சளி தொல்லையால் சென்னை மக்கள் ஏராளமானோர் அவதியுற்று வருகின்றனர். சளி மற்றும் லேசான இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களால், தற்போது சென்னையில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.  வழக்கமாக சளி தொல்லை வந்தால் 4 நாட்களில் சரியாகிவிடும். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் குறைந்தது 10 நாட்கள் வரை பொதுமக்கள் சளி தொல்லையினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதில் வயது மூத்தவர்களும், குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சென்னை மக்களை வாட்டி வதைக்கும் இந்த சளி தொல்லை குறித்து பெரம்பூர் சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெங்கடேசன் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமீபத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு மாசுக்களும் சேர்ந்து அது மழை நீரில் கலந்துள்ளதால், புது புது நுண்கிருமிகள் வெளியே வரும். இந்த நேரங்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் நோய்க் கிருமிகளின் தாக்கம் அதிகம் ஏற்படுவதால் இந்த காலகட்டங்களில் மக்கள் அதிக நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த மாதிரி காலகட்டங்களில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் நோய் தொற்று ஏற்பட்டு விடுகிறது. இருமல், சளி உள்ளிட்ட நோய்கள் வைரஸ் தொற்றினால் அதிகமாக பரவுகிறது. இது ஒரு தொற்று வியாதி மாதிரி யார் இருமினாலும், தும்பினாலும் காற்றின் மூலம் தொற்று மற்றவர்களுக்கு பரவும். குளிர்சாதன அறையில் வேலை செய்பவர்கள், ஒரே இடத்தில் அதிகமான எண்ணிக்கையில் நின்று வேலை செய்பவர்கள் யாரேனும் வைரஸால் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தும்பும் போதும் இருமும் போதும் தொற்று மற்றவர்களுக்கும் பரவி விடுகிறது.

இதனால் தற்போது சென்னையில் அதிக அளவில் மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகை அதிகம் உள்ளதால் வைரஸ் தோற்று ஏற்பட்டவுடன் அது அதிக மக்களை பாதித்து பெரும்பாலான மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதனால் தற்போது சென்னையில் சளி மற்றும் இருமல் தொல்லையால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியே செல்லும்போது கண்ட இடங்களில் சளி மற்றும் எச்சிலை உமிழ்கின்றனர். மேலும் முகக்கவசம் இல்லாமல் தும்மல் போடுகின்றனர். இதனால், நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவுகிறது என்ற ஒரு புரிதல் இல்லாமல் மற்றவர்களுக்கும் நோயை பரப்புகின்றனர். பொதுமக்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியே செல்லும்போது கையில் கண்டிப்பாக கைக்குட்டை வைத்திருக்க வேண்டும். மற்றும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் தாக்கம் குறைந்தது 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை இருக்கிறது. இதற்கு காரணம் ஒரு வைரஸ் தொற்று ஏற்படும் போது அதிலிருந்து பல வைரஸ்கள் உருவாகி பொது மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.

வழக்கமாக சளி, இருமல் வந்தால் பொதுமக்கள் 3 நாள் வரை சுயமாக மருந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது உள்ள வைரஸ்கள் அந்த மருந்தில் குணமாவது கிடையாது. இதனால் அதன் பின்பு மருத்துவமனைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள் தரும் மருந்து மாத்திரைகளை 3 – 5 நாட்கள் வரை சாப்பிடுகிறார்கள். இதனால், சளி மற்றும் இருமல் தொல்லை குணமாக 8 நாட்கள் வரை ஆகிறது. தற்போது இதுதான் சென்னையில் பெரும்பாலான மக்களுக்கு உள்ள நிலைமை. சாதாரணமாக சளி, இருமல் என்றால் 2 அல்லது 3 நாட்கள் வரை நாம் கை வைத்தியம் எடுத்துக்கொண்டு, சரியாகவில்லை என்றால் கண்டிப்பாக மருத்துவர்களை அணுகி மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியே சென்று வந்தவுடன் கண்டிப்பாக உப்பு நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்ப கூடாது. நமக்கு உண்டான வைரஸ் தொற்று மற்றவர்களுக்கும் பரவக்கூடாது என்ற தனிமனித ஒழுக்கம் இருந்தாலே சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள இது போன்ற நோய் தொற்றுகளை எளிதில் நாம் கடந்து சென்றுவிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

9 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi