திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மண்டல, மகரவிளக்கு காலங்களில் அதிகபட்சமாக 15 மணிநேரம் மட்டுமே நடை திறந்திருக்கும். கடந்த 2 வருடங்களாக பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் ஒன்று அல்லது 2 மணிநேரம் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது.
இந்த வருடம் மண்டல காலத்தின் முதல் நாளில் இருந்தே தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் மாலை 5 மணிக்குப் பதிலாக 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் 18 மணிநேரம் நடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அதிக நேரம் கிடைத்து உள்ளது. இதன் காரணமாக தற்போது பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் உடனுக்குடன் தரிசனம் செய்து திரும்புகின்றனர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் கூட பக்தர்கள் சிரமம் இல்லாமல் எளிதில் தரிசனம் செய்யும் நிலை காணப்பட்டது.
இதற்கிடையே நடைதிறந்த 5 நாளில் 3.30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் சபரிமலையில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேறி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.