சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் 35ஆயிரம் ஏக்கர் சம்பா மூழ்கியது. கடலோரம் மற்றும் வடமாவட்டங்களில் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. இதையடுத்து நாகப்பட்டினம், கீழ்வேளூர், காக்கழனி, வடுகச்சேரி, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், திருக்குவளை, வலிவலம், நாகூர், திருமருகல், வேதாரண்யம் திட்டச்சேரி என மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு தொடங்கிய கனமழை நேற்று மாலை 3 மணிவரை 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்தது. அதன்பிறகும் பரவலாக பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு 25 நாட்கள் ஆன இளம் சம்பா பயிர்கள், 30 ஆயிரம் ஏக்கரில் தண்ணீரில் மூழ்கியது. மாவட்டத்தில் பாலையூர், செல்லூர், தலைஞாயிறு, ஒதியத்தூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் மழை நீர் சூழ்ந்த காரணத்தால் நேரடி நெல் விதைப்பு செய்த சம்பா பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. நாகப்பட்டினத்தில் மேட்டு பங்களா தெருவில் மின் கம்பம் சாய்ந்தது. நாகப்பட்டினம் நீலா மேல வீதியில் சாலையில் இருந்த மரம் சாய்ந்தது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை துவங்கி தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் அருகே பல்வேறு கிராமங்களில் 5ஆயிரம் ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு செய்த ஒரு மாத வயதுள்ள நெற்பயிர் நீரில் மூழ்கும் நிலையில் உள்ளது, நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோயிலில் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமம் அடைந்தனர்.
மாவட்டம் முழுவதும் 24 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நாகப்பட்டினத்தில் 140 மில்லி மீட்டர், வேளாங்கண்ணியில் 136 மில்லி மீட்டர் என அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை விடாமல் பெய்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால், தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களை, மேடான பகுதிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுவை: வில்லியனூர் சேந்தநத்தத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(47), இவருக்கு சுகுணா என்ற மனைவியும், இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மதியம் 2 மணியளவில் வில்லியனூருக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பினார். அப்போது ரயில்வே கேட் அருகே நடந்து வந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு, அருகில் உள்ள காலிமனைகளில் தேங்கியுள்ள மழைநீரில் விழுந்தார். இதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று காலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒரு லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
* வேதாரண்யத்தில் 15 செ.மீ மழை 9ஆயிரம் ஏக்கர் உப்பளம் பாதிப்பு
வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு, கடுநெல் வயல் ஆகிய பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை துவங்கி நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை ஒரே நாளில் 15 சென்டிமீட்டர் மழை பெய்ததால் உப்பள பகுதியில் கடல் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இனி மழை காலம் முடிந்து பிப்ரவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்ற 10ஆயிரம் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி உள்ளனர்