மும்பை: மும்பையில் 107 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரமே வெள்ளக்காடானது. மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கேரளாவில் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதையடுத்து 24 மணி நேரத்தில் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கியது. நேற்று மும்பையில் பருவ மழை தொடங்கியது என வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பையில் நேற்று காலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் வெள்ளக்காடாக மாறின.
மும்பையில் நடப்பு மே மாதத்தில் அதிகபட்சமாக 29.5 மிமீ மழை பெய்துள்ளதாக கொலாபாவில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1918ம் ஆண்டு மே மாதம் அதிகட்சமாக 27.94 செ.மீ மழை பெய்துள்ளது. நகரில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தொடங்கினர். நகரம் முழுவதும் பல பகுதிகளில் 32 மரங்கள் முறிந்து விழுந்ததாக மாநகராட்சியினர் தெரிவித்தனர். இதுபோல் 5 இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. மகாராஷ்டிரா முழுவதும் 15 தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
* மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ள நீர்
மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டு 17 நாட்கள் ஆன நிலையில் ஆச்சார்யா அத்ரே சவுக் மற்றும் ஒர்லி ரயில் நிலையங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது. ஆச்சார்யா அத்ரே சவுக் ரயில் நிலையத்திற்குள் செல்லும் படிகளில் நீர் அருவி போல பெருக்கெடுத்து ஓடியதாக பயணிகள் தெரிவித்தனர். ஒர்லி சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தினுள்ளும் தண்ணீர் தேங்கியிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
* கேரளாவில் ஒரே நாளில் 6 பேர் பலி
கேரளாவில் கடந்த 3 தினங்களாக திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை 14 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அண்ணன், தம்பி உள்பட 6 பேர் மழைக்கு பலியானார்கள். இதையடுத்து கடந்த 2 நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரை காணவில்லை. கனமழைக்கு நேற்று கேரளாவில் 3 இடங்களில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது,
இதற்கிடையே கேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.