சென்னை: கடந்த ஆண்டில், ரயில் நிலையங்களில் ரூ.227.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1489 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் உபயோகம் அதிகரித்து வருவதற்கு எளிதில் கிடைக்கும் போதைப்பொருட்கள் காரணமாக உள்ளன. இதில் முக்கியமாக ரயில்களில் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன.
இந்திய ரயில்வேயின் பரந்த வலையமைப்பு மற்றும் அதிக பயணிகள் எண்ணிக்கை காரணமாக, ரயில்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு எளிதான வழியாக மாறி வருகின்றன. கஞ்சா, ஹெராயின், மெத்தாம்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் பயணிகள் மற்றும் சரக்கு பொருட்களில் புத்திசாலித்தனமாக மறைத்து கடத்தப்படுகின்றன.
இதை தடுக்க, இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ரயில்வே வலையமைப்பை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ஓரளவுக்கு உறுதியுடன் செயல்படுகின்றன. ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கைகளே எடுக்கப்படுகின்றன. போதைப்பொருட்கள் பரவுவதற்கான முக்கிய வழியாக ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை தடுக்க தீர்வு தேடுவது காலத்தின் கட்டாயமாகிறது.
கடந்த 2024-2025ல் ஆண்டில் ரயில்வே பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் 1700க்கும் மேற்பட்ட கடத்தல் பொருள் பறிமுதல் வழக்குகளில் ரூ.227.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1489 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆர்பிஎப் மூத்த அதிகாரி கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு படை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் பயிற்சி பெற்ற நாய் படைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆர்பிஎப் பணியாளர்கள் என்டிபிஎஸ் சட்டம், கண்டறிதல் முறைகள் மற்றும் என்சிபி உடனான ஒருங்கிணைப்பு குறித்து தீவிர பயிற்சி பெறுகின்றனர். குற்ற முறைகளை ஆய்வு செய்து, பாதிக்கப்படக்கூடிய ரயில்கள் மற்றும் பாதைகளை அடையாளம் காண பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதற்காக என்சிபி, மாநில காவல்துறை மற்றும் உளவு அமைப்புகளுடன் இணைந்து நிகழ்நேர உளவு பகிர்வு ஒன்றிணைந்து செயல்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.
எதிர்கால திட்டங்களாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஸ்கேனிங் அமைப்புகளை பயன்படுத்தி முன்கணிப்பு காவல் முறையை மேம்படுத்த உள்ளோம். பொதுமக்களுக்கு பொது விழிப்புணர்வை அதிகரிக்க உள்ளோம். முக்கிய நிலையங்களில் பெரிய அளவிலான பையை சோதிப்பதற்கு ஸ்கேனர்கள் நிறுவ உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.