சென்னை: ரயில் விபத்துகள் தொடருவதால், அதன் பாதுகாப்பு முறைகளை மீளாய்வு செய்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரயில்கள் மோதி நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். கடந்த ஜூன் மாதம் பாலசோர் ரயில் விபத்து ஏற்பட்டு, சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணி மனமிரங்குகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற விழைகிறேன். பெருவாரியான இந்தியர்கள் தங்களின் பயணத்திற்காக ரயில்களையே சார்ந்திருக்கும் சூழலில் குறுகிய கால இடைவெளியில் விபத்துகள் தொடர் கதையாவது மிகுந்த கவலையளிக்கிறது. ரயில்வே பாதுகாப்பு முறைகளை உடனடியாக ஒன்றிய அரசு மீளாய்வு செய்து, மேம்படுத்திப் பயணிகளின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.