கும்மிடிப்பூண்டி: ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் பட்டா கத்தி வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் அவ்வப்போது பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. ரூட் தல போன்ற விவகாரங்களில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்திகளை கொண்டு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கல்லூரி மாணவர்களின் மோதல் சம்பவங்களை கட்டுப்படுத்திடும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு கண்காணிக்குமாறு ரயில்வே ஏடிஜிபி வனிதா சென்னை ரயில்வே காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில் சென்னை – கும்மிடிப்பூண்டி – சூளூர்பேட்டை ரயில் மார்கத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்றுமுன்தினம் மின்சார ரயில் வந்தது. இந்த ரயில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 2 கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் இருந்தது தெரியவந்தது. 2 பேரை போலீசார் பிடித்து கொருக்குப்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் துளசிங்கம் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 17 வயது மாணவன், பச்சையப்பன் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருவதும், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த தினேஷ்(19) பச்சையப்பன் கல்லூரியில் முதலாமாண்டு பிஏ படித்து வருவதும் தெரியவந்தது. தினேஷை எச்சரிக்கை செய்து காவல்நிலைய ஜாமீனில் போலீசார் அனுப்பி வைத்தனர். கத்தியுடன் இருந்த 17 வயது சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.