டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.1,969 கோடி நிதி ஒதுக்கவும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ட்ராக் மெயின்டெய்னர்கள், லோகோ பைலட்கள், ரயில் மேலாளர்கள் (பாதுகாவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள்.
தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பிற குரூப் ‘சி’ ஊழியர்கள் தீபாவளி போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர். 2022-23ம் ஆண்டில் ரயில்வே செயல்பாடு சிறப்பாக உள்ளதால் 78 நாள் ஊதியம் போனஸாக ஒன்றிய அரசு அறிவித்தது. 2022-23ம் ஆண்டில் 650 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 151 கோடி டன் சரக்குகளை ரயில்வே கையாண்டுள்ளது.