Thursday, June 19, 2025
Home செய்திகள்Showinpage ரயில்வே பட்ஜெட், பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள், தற்போது திட்ட விவரத்தையும் ஒழித்துவிட்டனர்: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

ரயில்வே பட்ஜெட், பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள், தற்போது திட்ட விவரத்தையும் ஒழித்துவிட்டனர்: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

by Suresh

சென்னை: ரயில்வே பட்ஜெட், பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள், தற்போது திட்ட விவரத்தையும் ஒழித்துவிட்டனர் என ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“பாஜக அரசு, இரயில்வே பட்ஜெட்டை ஒழித்தது. கடந்த ஆண்டு பிங்க் புத்தகத்தை ஒழித்தது. இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு விபரங்களை ஒழித்துவிட்டது. தமிழகத்திற்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் இருந்த 4 திட்டங்களை மீண்டும் சர்வே பட்டியலுக்கு மாற்றியுள்ளது. அனைத்தையும் மறைத்து மக்கள் அறியாமைக்குள் வீழ்த்த முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எனது கண்டனம். இரயில்வே பட்ஜெட்டை ஒழித்தார்கள். பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள் இப்பொழுது திட்ட விபரங்களையும் ஒழித்துக்கட்டி விட்டார்கள். தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்ட ஒதுக்கீட்டு விபரங்களே இல்லை. பாஜக அரசின் மக்கள் விரோத செயலுக்கு கண்டனம்.

பாஜக ஆட்சிக்கு வந்த பின் இரயில்வே பட்ஜெட்டை ஒழித்துக்கட்டினார்கள். இரயில்வே திட்ட விபரங்கள் அடங்கிய பிங்க் புத்தகத்தை சென்ற ஆண்டு பொதுபட்ஜெட் முடியும் வரை வெளியிடப்படவில்லை. இதனை நாடாளுமன்றத்தில் நான் உள்பட பல உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி விமர்சித்தோம். தொடர்ந்து நாடு முழுவதும் விமர்சனம் எழுந்தது. பட்ஜெட் முடிந்தபின் தான் பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் முடிந்த பின்னும் பிங்க் புத்தகம் வெளியிடப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பிங்க் புத்தகம் வெளியிடப்பட போவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஒவ்வொரு ரயில்வேக்கும் தொகுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தது.

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் வெளியானது. கடைசியாக நேற்று தான் தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப்பட்டியல் ஒவ்வொரு ரயில்வேக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பார்த்தால் அதில் முதலீட்டு திட்டங்கள் என்ற பெயரில் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்துக்கும் திட்ட மதிப்பீடு எவ்வளவு என்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பிங்க் புத்தகத்தில் இருந்த விவரங்களான திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டுக்கு எவ்வளவு ஒதுக்கீடு போன்ற விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இல்லை. திட்ட மதிப்பீடு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது 25 -26க்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை.

இதனால் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையை உருவாக்கியுள்ளார்கள். ஏற்கனவே பல ரயில்வே திட்டங்களுக்கு, குறிப்பாக புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியிருப்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டி இருந்தேன். எவ்வளவு ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள் என்கிற விவரம் வந்தால் தான் நம்மால் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களா அல்லது கூடுதலாக ஒதுக்கி இருக்கிறார்களா என்கிற விவரம் நமக்கு தெரிய வரும். அதை குறித்து விமர்சனங்களையும் முன்வைக்க முடியும்.

ஆனால் அந்த விவரங்கள் வழங்கப்படாமல் வெறும் திட்ட மதிப்பு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமல்ல தெற்கு ரயில்வேக்கு இந்த ஆண்டுக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு என்ற ஒரு சுருக்க அறிக்கை பிங்க் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருக்கும். அந்த விவரம் இப்பொழுது முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் மொத்த திட்ட செலவுகள் ஒவ்வொரு திட்டத்துக்கும் தரப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு ரயில்வேக்கு அல்லது ஒவ்வொரு ரயில்வேக்கும் தனித்தனியாக எவ்வளவு ஒதுக்கீடு என்கிற விவரம் மறைக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல ஏற்கனவே சர்வே முடிந்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட ஆவடி- திருப்பெரும்புதூர் இருங்காட்டு கோட்டை புதிய பாதை திட்டம் பட்ஜெட்டில் இருந்து எடுக்கப்பட்டு சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு வெறும் ஒன்றரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கனவே சர்வே முடித்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இரட்டை பாதை திட்டங்கள் இப்போது மீண்டும் சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. காட்பாடி -விழுப்புரம் ;ஈரோடு- கரூர் -சேலம்; கரூர்- திண்டுக்கல் ஆகிய மூன்று திட்டங்களுக்கு இரண்டு கோடியும் 81 லட்சமும் 2 கோடியுமாக முறையே ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இதைப் போல மற்ற புதிய பாதை திட்டங்களான அத்திப்பட்டு- புத்தூர்; திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம்- நகரி; ஈரோடு- பழனி;மொரப்பூர்- தர்மபுரி ஆகிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்கிற விவரம் இல்லாததால் நம்மால் அதன் உண்மை நிலையை அறிய முடியாத வகையில் மறைத்திருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை அகல பாதை திட்டம் இரட்டை பாதை திட்டம் புதிய பாதை திட்டம் ஆகியவற்றுக்கு இந்த தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப்பட்டியலிலும் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் இல்லாமல் தமிழக மக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதுமுள்ள உள்ள மொத்த ரயில்வேகளுக்கும் இதே நிலை தான். யாருக்கும் திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டு ஒதுக்கீடு என்பதான விவரங்கள் கொடுக்கப்படவில்லை. இந்த விவரங்கள் இருந்தால் அரசின் பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்கள் எழும் என்பதை தவிர்ப்பதற்காகவே பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள். இப்போது தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப் பட்டியலிலும் விவரங்களை மறைத்துள்ளார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

வெளிப்படையான நிர்வாகம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. புள்ளிவிபரங்களை மறைப்பது என்பது குற்றம் மட்டுமல்ல, குற்றத்தை மறைக்கும் உச்சபட்ச அநீதி. பாஜக அரசு தங்களது அரசியல் காரணங்களுக்காக செய்யும் பாரபட்சமான அணுகுமுறையால் தொடர்ந்து அம்பலப்பட்டு வருகிறது. அதில் இருந்து தப்பிக்க மக்களை தகவல்கள் அற்ற கையறு நிலையில் நிறுத்துகிறது.

இரயில்வே துறையில் திட்டங்களுக்கான உண்மையான ஒதுக்கீட்டு விபரங்களை வெளியிடாமல் மக்களையும் நாட்டையும் அறியாமைக்குள் தள்ளும் ஒன்றிய அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi