மண்டபம் : மண்டபத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ரயில்வே நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியான ஓடைத்தோப்பு, மீனவர்காலனி, ஐ.என்.பி காலனி, தோணித்துறை, தோப்புக்காடு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், காந்திநகர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்வே தண்டவாளத்தை மாணவர்கள் ஆபத்தான முறையில் கடந்து, இந்த பள்ளிக்கு சென்று வருகின்றனர். ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டதை அடுத்து, அதிகமான ரயில்கள் இந்த மார்க்கத்தில் சென்று வருகின்றன. மேலும் ரயில்வே நிர்வாகம், மண்டபம் ரயில்வே நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் பாதுகாப்பு கருதி, சுற்றுச் சுவர் எடுத்து அடைத்து வருகிறது.
இதனால் இந்த பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மண்டபம் நகர் பகுதி வழியாக, ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் காந்தி நகரில் உள்ள பள்ளிக்கு வரவேண்டும். இதற்காக மாணவர்கள், சுமார் பத்து கிலோ மீட்டர் தொலை தூரத்தை சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், இக்கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வர, ரயில்வே நடைமேடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்று வர நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ரயில்வே கேட் அமைத்து வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக ஆய்வு செய்து மாற்று பாதைகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.