ஜோலார்பேட்டை: ஆம்பூர் அருகே தந்தை ரயில்வே பணியில் உயிரிழந்த நிலையில், நஷ்டஈடு பெற நீதிமன்றத்திற்கு செல்ல முயன்ற மகன் ரயில் மோதி பலியானார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதியில் நேற்று காலை அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் வாலிபர் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆம்பூர் அடுத்த சோலூர் கிராமம், பாலாறு ரோடு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் நாகராஜன் (50) என்பதும், இவர் ஆம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 12 வருடங்களாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் கடந்த மாதம் வேலையில் இருந்து நின்று, வீட்டில் இருந்து வந்த நிலையில், இவரது தந்தை ரயில்வேயில் ஊழியராக பணியில் இருக்கும் போது இறந்து விட்டாராம்.
அதற்கான நஷ்டஈடு பெறுவதற்காக சென்னையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கிற்காக அவ்வப்போது ரயில் மூலம் சென்னை சென்று வந்துள்ளார். அதன்படி, வழக்கம் போல் நேற்று அதிகாலை சென்னைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு வந்தவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயில் அடிபட்டு தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது விசாரணையில் தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.