பெரம்பூர்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல்வேறு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பெரம்பூர் லோகோ பணிமனை முன்பு நேற்று காலை எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கத்தினர் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லோகோ கிளை தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார்.
கிளை செயலாளர்கள் நாகேந்திரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மண்டல நிர்வாக தலைவர் சூரிய பிரகாஷ், பணிமனை கோட்ட நிர்வாக தலைவர் கருணாகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும், ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.