மதுராந்தகம்: கடந்த 2013ம் ஆண்டு முதல் சென்னை- விழுப்புரம் ரயில் மார்க்கத்தில், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தில் அமைந்திருந்த ரயில் நிலையம் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் நிலையத்தில் விழுப்புரம் பேசஞ்சர், திருப்பதி பேசஞ்சர் உட்பட 3 ரயில்கள் நின்று சென்றன. இந்த ரயில் நிலையம் ரத்து செய்யப்பட்டதிலிருந்து கரசங்கால், நெடுங்கல், புறங்கால் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு மீண்டும் ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையமாக அறிவிக்கப்பட வேண்டும் என பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த ரயில் நிலையத்தில் மேற்கூரைகள் அகற்றும் பணி நடைபெற்றபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் சென்று விட்டனர். தற்போது, மீண்டும் நேற்று முன்தினம் கரசங்கால் ரயில் நிலையத்தில் உள்ள பயனற்ற மேற்கூரை பிளாட்பாரங்களை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் ரயில்வே அதிகாரிகள் வந்திருந்தனர். இந்த தகவலை கேட்ட கரசங்கால், நெடுங்கால் உள்ளிட்ட கிராமமக்கள் ரயில் நிலையத்தில் பணிகள் செய்ய விடாமல் தடுத்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
அப்போது, அங்கு வந்த மதுராந்தகம் டிஎஸ்பி சிவசக்தி தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால், போராட்டத்தை முன்நின்று நடத்திய சமூக ஆர்வலர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார், பொதுமக்களை கலைத்து விட்டு ரயில் நிலையத்தில் இருந்த மேற்கூரை மற்றும் பிளாட்பாரம் அகற்றும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.