சென்னை: ராஜிவ் காந்தியின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.1000 மட்டுமே கொடுத்திருக்கிறது. இதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, 23ம்தேதி ரூ.1001ஐ அனைத்து மாவட்ட தலைவர்களும், தமிழக மக்களும், பிரதமர் மோடிக்கும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ரயில்வே துறை அமைச்சருக்கும் அனுப்பி வைக்க உள்ளோம்.
தமிழக அரசும், ஒன்றிய அரசும் சேர்ந்து கலைஞர் நினைவு நாணயம் வெளியிட்டுள்ளது. கலைஞருக்கு யார் யாரெல்லாம் பாராட்டு தருகிறார்களோ அதை நாங்கள் வரவேற்கிறோம். அதில் அரசியல் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில், மூத்த தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், விஜய்வசந்த் எம்பி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கலீல் ரகுமான், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், இல.பாஸ்கர், டி.செல்வம், ஆலங்குளம் எம்.எஸ்.காமராஜ், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், முத்தழகன், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி மற்றும் நிர்வாகிகள் மன்சூர் அலிகான், சூளை ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.