நாமக்கல்: நாமக்கல் அடுத்த முத்துகாப்பட்டியை சேர்ந்தவர் சந்துரு (24). இன்ஜினியரான இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் வைத்துள்ளார். அந்த பைக்கில் ரயில்வே பிளாட்பாரத்தில் ரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக சென்று சாகசம் செய்துள்ளார்.
மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து முத்துக்காப்பட்டி, ரிங்ரோடு வரை 166 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று, அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நாமக்கல் போக்குவரத்து பிரிவு போலீசார், 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து அந்த வாலிபர் நீதிமன்றத்தில் ரூ.12 ஆயிரம் அபராதம் செலுத்தினார். மேலும் போலீசாரின் பரிந்துரையின்படி சந்துருவின் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.