செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் ரயில்வே மேம்பாட்டு பணிகள் குறித்து காஞ்சிபுரம் எம்பி, செங்கல்பட்டு எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே மேம்பாட்டு பணிகளை காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் நேற்று ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஏர்யா, ரயில் நிலைய மேலாளர் காயத்ரி ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டனர்.
அண்ணா நகர்-மேலமையூர் ரயில்வே சிறு பாலத்தை அகலப்படுத்துதல் பணி மற்றும் மழை காலங்களில் மழைநீர் வெளியே செல்வதற்கான மழைநீர் வடிகால் மற்றும் ரயில்வே பகுதியில் கால்வாய்கள் அமைப்பதும் மேலும், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாட்டு பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் தேவைகளை குறித்து கேட்டறிந்தனர். இந்நிகழ்வில், செங்கல்பட்டு திமுக நகர செயலாளர் நரேந்திரன்,செங்கல்பட்டு நகராட்சி தலைவர் தேன்மொழி நரேந்திரன் நகர்மன்ற கவுன்சிலர் சந்தோஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.