மேல்மருவத்தூர்: சோத்துப்பாக்கம் பகுதியில் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மேல்மருவத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் பாதையில், செய்யூர்-வந்தவாசி செல்லும் சாலையின் ரயில்வே கேட் உள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மணல் மற்றும் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள், சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள மேற்கண்ட சாலை வழியாக ரயில்வே கேட்டை கடந்து சித்தாமூர்-செய்யூர் வழியாக ஈசிஆர் சாலையை அடைந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் நிலை உள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக செல்லும் பொது மக்களும் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், இந்த இருவழி ரயில் பாதையில் ரயில்கள் வருவதையொட்டி அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால்,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், இந்த ரயில்வே கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த 2024ம் ஆண்டு உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக குறிப்பிட்ட ரயில்வே கேட் பகுதியில் மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
ஆனால், அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். தொடர் போராட்டத்தின் விளைவாக சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக ரயில்வேதுறை சார்பில் ரூ.31.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், மேம்பால பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.
ஆனால், தொடக்கவிழா மட்டும் நடைபெற்றதே தவிர கட்டுமான பணிகள் ஏதும் தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் கூட இதுவரை நடைபெறாத நிலை உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசு அறிவித்த மேம்பாலத்திற்கான நிதி ரூ.31 கோடி 87 லட்சத்தில் உடனடியாக மேம்பால பணியினை துவக்கிட வேண்டும்.
அதுவரையிலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கால வரமுறையின்றி இயக்கப்பட்டு வரும் கனரக வாகனங்களை நேர கட்டுப்பாட்டுக்குள் வரையறை படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்து இந்திய ஜனநாயகம் மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நேற்று முன்தினம் சென்னை – திருச்சி ரயில்வே பாதை அருகே அமைந்துள்ள சோத்துப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் பாடை கட்டி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.