வாணியம்பாடி: வாணியம்பாடியில் ரயில்வே ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2பேர் இன்று கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபீசர்ஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் சந்திரன், ரயில்வே ஊழியர். இவரது மனைவி இனியவள் (52). தம்பதிக்கு குகன் என்ற மகனும், ஆர்த்தி, பிரீத்தி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். சந்திரன் இறந்துவிட்டார். அவரது மகன் குகன் சேலம் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இரு மகள்களும் திருமணம் முடிந்து கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாணியம்பாடியில் உள்ள வீட்டில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டின் வெளியே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் வீட்டு ஜன்னல் கண்ணாடி, அங்கிருந்த வாகனம் ஆகியவை சேதமானது. இதுதொடர்பான புகாரின்பேரில் வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக சென்னை தாம்பரத்தை சேர்ந்த சுப்புராஜ் (28), பாலாஜி (29) ஆகிய 2 பேரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். அவர்களை வாணியம்பாடிக்கு இன்று அழைத்து வந்து நாட்டு வெடிகுண்டு வீசியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.