திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சொரணூர்-திருவனந்தபுரம் வேநாடு எக்ஸ்பிரஸ் கொல்லம் அருகே சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் கொல்லம் அருகே கப்பலண்டிமுக்கு ரயில்வே கேட்டை தாண்டி சென்றது. இந்த ரயில் சென்ற சிறிது நேரத்திலேயே கன்னியாகுமரி-புனலூர் பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயில் வருவது குறித்த தகவல் கிடைத்தவுடன் கப்பலண்டிமுக்கு கேட்டில் பணியில் இருந்த வினிதா, மகேஸ்வரி ஆகியோர் உடனடியாக கேட்டை மூடினர். இந்த சமயத்தில் திடீரென அங்கிருந்த ஒரு பெரிய மரம் தண்டவாளம் அருகே உள்ள மின் கம்பத்தில் விழுந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மரம் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தண்டவாளம் அருகே மரம் எரிந்து கொண்டிருந்த 100 மீட்டர் அருகே இந்த ரயில் நிறுத்தப்பட்டது. தக்க சமயத்தில் நிறுத்தப்பட்டதால் கன்னியாகுமரி-புனலூர் ரயில் மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பியது. உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயை முழுமையாக அணைத்த பின்னரே மின்கம்பிகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. பல மணி நேரத்திற்கு பின்னர் ஒரு பாதையில் மட்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.