புதுடெல்லி: ரயில் பயணிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் ரயில்ஒன் மொபைல் ஆப்பை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த ஆப்பில், டிக்கெட் முன்பதிவு, ரயில் மற்றும் பிஎன்ஆர் குறித்த தகவல் அறிதல், பயண திட்டமிடல், ரயில் உதவி சேவைகள், உணவு முன்பதிவு போன்ற பல சேவைகளை எளிதாக பெற முடியும்.
இதுமட்டுமின்றி முன்பதிவு செய்யப்பட்டாத ரயில் டிக்கெட்டுகளையும் இந்த ஆப்பில் பெறலாம். பிளாட்பார்ம் டிக்கெட்களையும் வாங்க முடியும். கூடுதலாக ரயிலில் சரக்குகளை அனுப்புதல் தொடர்பான விசாரணைக்கான வசதிகளும் உள்ளன. ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் தளங்களில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த ஆப்பை பதிவிறக்கிய பிறகு, ரயில்கனெக்ட் அல்லது யுடிஎஸ்மொபைல் செயலின் தற்போதைய பயனர் ஐடியை பயன்படுத்தி உள்நுழையலாம். இதன் மூலம் பயனர்கள் வெவ்வேறு சேவைகளுக்கு தனித்தனி ஆப்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இந்த ஆப்பில் ஆர்-வாலட் வசதியும் உள்ளது.