நாட்டு மக்களின் போக்குவரத்துச் சேவையில் ரயில் போக்குவரத்து முக்கிய இடம் பிடித்துள்ளது. நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இத்தகைய ரயில் போக்குவரத்துச் சேவையானது சிறப்பான முறையில் இயங்கும் வகையில் பரமாரிப்பு மற்றும் பல்வேறு பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு நிமிடமும் முதல் நிலை அதிகாரிகள் முதல் கடைநிலை கேங்மேன் வரை அனைவரும் ஒன்றிணைந்து தீவிரமாக கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு ரயில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவார்கள். இத்தகைய பணியில் ரயில் இன்ஜின் டிரைவர்கள்(லோகோ பைலட்) (அசிஸ்டெண்ட் லோகோ பைலட்) மற்றும் கார்டு ஆகியோரின் பங்கும் இன்றியமையாதது. ரயில் இயக்கத்தின்போது இன்ஜின் டிரைவர்கள் மற்றும் கார்டு ஆகியோருக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கு இன்ஜின் ஹாரன் மிக முக்கியமான ஒன்றாகும். ப்ப்ப்ப்பாம்…பாம்…பாம் என்ற ஹாரன் சத்தம் தண்டவாளத்தில் நடமாடும் மனிதர்கள் மற்றும் விலங்குகளை எச்சரிக்க மட்டுமல்லாமல் ரயிலைச் சீராக இயக்கவும் ஹாரன் முக்கியமானதாக உள்ளது.
தற்போதைய நவீனகாலத் தொழில்நுட்பத்தில் வாக்கி டாக்கி, ஒயர்லஸ் தொலைத்தொடர்பு வந்துவிட்டாலும், இன்றளவும் ரயில்கள் இயக்க இந்த 11 வகையான ஹாரன்கள் ரயில் இயக்கத்தின்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் மிக முக்கியமானவற்றில் சில:ஒருமுறை சிறிய ஹாரன் எழுப்பிய படி ரயில் நகர்ந்தால், ரயில் பணிமனைக்குச் செல்கிறது அல்லது அங்கிருந்து வருகிறது, என்று அர்த்தம். இரண்டு முறை சிறிய ஹாரன் ஒலித்தால், ரயிலின் பின்புறம் உள்ள கார்டுக்கு ரயில் புறப்படுவதைத் தெரிவிக்க ஒலி எழுப்பப்படும். மூன்று முறை சிறிய ஹாரன் ஒலிப்பது மிக அரிதாகவே பயன்படுத்தப்படும். மூன்று முறை குறுகிய சத்தத்தை எழுப்பினால் ரயில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்று பொருள். ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் ரயில் இல்லை என பின்புறம் இருக்கும் கார்டுக்கு சிக்னல் கொடுப்பதற்காக இந்த ஒலி எழுப்பப்படும்.
இந்த சிக்னல் கிடைத்ததும் உடனடியாகத் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரேக் சக்கரத்தை சுழற்றி உடனடியாக ரயிலை கார்ட் நிறுத்துவிடுவார். 4 முறை சிறிய ஹாரன் அடித்தால் ரயிலில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு அல்லது தண்டவாளப் பாதையில் சிக்கல் ஏற்பட்டு ரயில் பயணம் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை கார்டுக்கு தெரிவிக்க ஒலிப்பதாகும். தொடர் ஹாரன் சத்தம் கேட்டால் நிறுத்தம் இல்லாத ஒரு ரயில் நிலையத்தை வேகமாக கடக்கிறது, என்பதாகும். 6 முறை குறுகிய ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் ரயில் அபாயக் கட்டத்தில் இருக்கிறது என்பதைத் தெரிவிப்பதாகும். இதனை அறிந்ததும், கார்ட் உடனடியாக ரயில் போக்குவரத்துத் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விபத்து ஏற்படாத வகையில் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திவிடுவார்.