நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கன மழை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை கொட்டியது. ஒரு சில நேரங்களில் கனமழையும், சாரலுமாக நீடித்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையிலான ரயில் பாதையில் பள்ளியாடி அருகே திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த ரப்பர் மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது. தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் இதை கண்காணித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீட்பு குழுவினர் வந்து உடனடியாக மரத்தை அகற்றினர். இதனால் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் புறப்பட்டது. மரத்தை அகற்றாமல் இருந்திருந்தால், பரசுராம் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கி இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.