செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி – பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு ஜோடி பேசிக்கொண்டே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியது. இதில் ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற பெண் படுகாயம் அடைந்தார்.தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பலியானவரின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுங்காயம் அடைந்த பெண்ணை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பலியானவர்கள் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷரீப் (35), கோழிக்கோடை சேர்ந்த ஐஸ்வர்யா (28) என்பதும், காதலர்களான இவர்கள் வேலை தேடி நேற்று முன்தினம் காலை சென்னைக்கு வந்ததும் தெரிய வந்தது. இரவு நண்பரின் வீட்டில் தங்குவதற்காக இருவரும் சென்றுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக பேசிக்கொண்டே கடந்தபோது மின்சார ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் பலியான ஐஸ்வர்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.