தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் உயர்ரக போதைபொருளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள 650 கிராம் மெத்தகுலோபின் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை, சேணியம்மன் கோவில் பகுதியில் மெத்தகுலோபின் எனும் உயர்ரக போதை பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக நேற்றிரவு தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அங்கு சந்தேக நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இச்சோதனையில், அவரிடம் விற்பனைக்காக மெத்தகுலோபின் எனும் உயர்ரக போதைபொருள் வைத்திருந்தது போலீசாருக்குத் தெரியவந்தது.
பின்னர் அந்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி அப்துல்கரீம் (24) என்பதும், இவர்மீது கொலை முயற்சி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர் மெத்தகுலோபின் எனும் உயர்ரக போதை பொருளை கூரியர் மற்றும் பார்சல்களில் பெற்று, வடசென்னை பகுதிகளில் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி அப்துல் கரீமை கைது செய்தனர். அவரிடம் இருந்து பல லட்சம் மதிப்பிலான 650 கிராம் மெத்தகுளோபின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.