சென்னை: வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனின் நண்பரான பிரசாத் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையை சேர்ந்தவர் பிரசாத் (33), அதிமுக தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனின் நெருங்கிய நண்பர். இவரது நியமனம், அதிமுக தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு பிடிக்கவில்லை. பிரசாத் அதிமுக தொழில்நுட்ப பிரிவில் அதிகாரம் படைத்த நபராக வளர்ந்தார். ஒரு கட்டத்தில் சி.டி.ஆர்.நிர்மல்குமார், பிரசாத்திடம் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். அதன் பிறகு தற்போது சி.டி.ஆர்.நிர்மல்குமார் தவெகவில் உள்ளார்.
முன்னாள் முதல்வரின் மகனின் நண்பர் என்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிரசாத் தனக்கு என தனி அதிகாரத்தை கட்சிக்குள் வளர்த்து வந்தார். நடிகர் கருணாஸ் கட்சியில் இளைஞர் அணி முன்னாள் செயலாளராக இருந்த அஜய் வாண்டையாரை அதிமுகவிற்கு அழைத்து வந்தது பிரசாத் தான். அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, உணவக உரிமையாளர் ராஜா ஆகியோர்் பெரிய அளவில் மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் பிரசாத், பல்வேறு அரசு பணியிடங்களுக்கு வேலை வாங்கி தருவதாக மாவட்ட வாரியாக பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். கடந்த 22ம் தேதி நுங்கம்பாக்கம் பகுதியில் தனியார் பாரில் மது போதையில் நடந்த தகராறில் தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா, அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, தொழிலதிபர் கணேஷ்குமார், தனசேகரன் மற்றும் அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதிமுக நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட நபர்கள் அவர் மீது புகார்கள் அளித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் பிரசாத் மீது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது, ஐதராபாத் தொழிலதிபருக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க சலுகைகள் வாங்கி தருவதாக பணம் பெற்றது என 3 புகார்கள் வந்துள்ளது. மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் பிரசாத் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல்துறையில் சில நண்பர்கள் உதவியுடன் மோசடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து, தென் மாவட்டங்களில் ரவுடிகள் கொலை தொடர்பான டவர் லொக்கேஷன் பெற்றது என பிரசாத் மீது பல்வேறு புகார்கள் தற்போது வெளியே வந்துள்ளது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் பிரசாத், அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோரை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதில் அதிமுக ஐடி விங்க் நிர்வாகியான பிரசாத், முன்னாள் முதல்வர் மகன் மிதுனின் நட்பை பயன்படுத்தி அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோருடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு பல கோடி வரை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் பிரசாத் வீட்டில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மிதுன் உதவியுடன் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்ற ஆவணங்கள், அஜய் வாண்டையார் மற்றும் ரவுடிகளுடன் சேர்ந்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ேமலும் பிரசாத் மோசடிக்கு தனியாக பயன்படுத்தி வந்த லேப்டாப் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது.
அதில்தான் முன்னாள் முதல்வரின் மகன் தொடர்பான பல முக்கிய தகவல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம் 2 நாள் காவல் முடிந்து நேற்று பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்டோரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் தொடர்பான ஆவணங்கள் பிரசாத் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஓரிரு நாளில் இவர்களுடன் மோசடிக்கு உடந்தையாக இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நடிகர்களிடம், சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து பிரசாத் நீக்கம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக தகவல் கொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக பணியாற்றி வந்த பிரசாத் கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர், தென் ெசன்னை தெற்கு கிழக்கு மாவட்டம் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.