*வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
பட்டுக்கோட்டை : பட்டுக்கொட்டை மார்க்கெட்டில் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 42 கிலோ மீன்கள், கருவாடு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியகடைத்தெருவில் உள்ள மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளில் அழுகிய நிலையில் உள்ள மீன்கள் விற்பனை செய்யவதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து காவல்துறை உதவியுடன் அதிரடி ரெய்டு நடத்தினர்.
மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை உத்தரவின்படி மீன்வளத்துறை ஆய்வாளர் கிளஸ்டஸ்ராஜா, பட்டுக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆய்வின்போது, தற்போது மீன்பிடி தடைகாலம் இருப்பதால் பழைய மீன்கள் மற்றும் தரம் குறைவான மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அப்போது 5 மீன் கடைகளில் தரம் குறைவான, சாப்பிட தகுதியற்ற நிலையில் இருந்த 142 கிலோ மீன்கள் மற்றும் கருவாடு பறிமுதல் செய்யப்பட்டது. உடனே பறிமுதல் செய்யப்பட்ட தரம் குறைவான, சாப்பிட தகுதியற்ற நிலையில் இருந்த மீன்கள் மற்றும் கருவாடு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் 5 மீன் கடைகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ம எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோல் ஆட்டிறைச்சி கடைகளிலும் அதிரடி ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு ஆட்டிறைச்சி கடைக்கு ரூ.1000 அபராதமும், எச்சரிக்கை நோட்டீஸ்ம் வழங்கப்பட்டது.