புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி நேற்று 55வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைதளங்களிலும் நேரிலும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிற்பகல் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த ராகுல்காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,“மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கு ஆசிர்வதிக்கப்படட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கூட்டணியை சேர்ந்த பல கட்சிகளின் தலைவர்களும் ராகுலுக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) தலைவர் சரத்பவார், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே ஆகியோரும் ராகுலின் பிறந்த நாளுக்கு தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.