புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் மற்றும் துணை செயலாளர்கள் என 45 அதிகாரிகளின் நேரடி நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த சனியன்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேரடி நியமன முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது தான் என்றும், அது குறித்து காங்கிரஸ் விமர்சிப்பது அதன் பாசாங்கு தனத்தை காட்டுக்கின்றது. காங்கிரஸ் கொண்டு வரப்பட்டதை செயல்படுத்த பாஜ வெளிப்படையான முறையை கொண்டு வந்துள்ளது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், காங்கிரஸ் சில துறை சார்ந்த சிறப்பு பதவிகளில் நிபுணர்களை நியமிப்பதற்கு மட்டும் தான் நேரடி நியமனத்தை கொண்டுவந்தது. ஆனால் தலித்துக்கள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளை பறிக்கும் மோடி அரசு வழிவகை செய்துள்ளது. நேரடி நியமனம் குறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில், நேரடி நியமனத்தின் மூலமாக அதிகாரிகளை பணியமர்த்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கையானது தலித், ஓபிசி மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதலாகும். பகுஜன்களிடம் இருந்து இட ஒதுக்கீட்டை பறிப்பதற்கு பாஜ முயற்சிக்கின்றது. நேரடி நியமனம் என்பது அவர்களுக்கு எதிரான தாக்குதலாகும்.
பாஜவின் ராம ராஜ்ஜியத்தின் திரிக்கப்பட்ட பதிப்பு அரசியலமைப்பை அழிக்கவும், பகுஜன்களிடம் இருந்து இட ஒதுக்கீட்டை பறிக்கவும் முயற்சிக்கின்றது. இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மோடியின் உத்தரவாதம் தான் ஐஏஎஸ் தனியார்மயமாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். கார்கே தனது எக்ஸ் பதிவில், மோடி அரசின் நேரடி நியமன விதி ஏன் அரசியலமைப்பு மீது தாக்குல் நடத்துகிறது? அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலமாக பாஜ கடந்த 10 ஆண்டுகளில் 5.1லட்சம் பதவிகளை நீக்கியுள்ளது. சாதாரண மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சேர்ப்பு 91 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-2023ம் ஆண்டில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பதவிகள் 1.3லட்சம் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.