சென்னை: ராகுல் காந்தியை பின்புற வாசலில் வந்து மோடி அரசு முடக்க நினைக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது, அதில் தலையிட முடியாது. ராகுல் காந்தி மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ராகுல் காந்திக்கு எந்த இடைக்கால நிவாரணமும் இல்லை. அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். மக்கள் மன்றத்தில் ராகுல் காந்தியை முடக்க முடியாது. ராகுல் காந்தியை பின்புற வாசலில் வந்து மோடி அரசு முடக்க நினைக்கிறது. ராகுல் காந்தியை தேர்தலில் நிறுத்த விடாமல் சதி செய்கின்றனர். உண்மையான அரசியல் தலைவராக இருந்தால் ராகுல் காந்தியை தேர்தல் களத்தில் மோடி சந்திக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஒன்றிய பா.ஜ.க. அரசால் எந்த துறையிலும் வெற்றி பெற முடியவில்லை. சாதி, பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்து மக்களை ரத்தம் சிந்த வைக்க முயற்சி செய்கிறார்கள். ராகுல் தலைமையில் ஒரு ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மோடி அரசு போடும் தடையை உடைத்து வெற்றி பெறுவோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.