புதுடெல்லி: அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராக உபி மாநிலம் சுல்தான்பூர் சென்ற ராகுல்காந்தி, லக்னோ திரும்பும் வழியில் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம் சேட் என்பவரை சந்தித்தார். அப்போது செருப்பு தைக்கும் தொழில் குறித்து ராகுல் கேட்டறிந்தார். அவருக்கு புதிய செருப்பு தைக்கும் எந்திரத்தை மறுநாள் ராகுல்காந்தி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் ராகுல்காந்திக்கு புதிய ஷூ ஒன்றை தயார் செய்து ராம் சேட் அனுப்பி வைத்துள்ளார். அதை எடுத்துப்பார்த்து மகிழ்ந்த ராகுல்காந்தி, உடனடியாக ராம் சேட்டிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். மேலும் அதை தனது கால்களில் அணிந்தார். இதுதொடர்பான வீடியோவை ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ராம் சேட் ஜி மிகவும் வசதியான மற்றும் சிறந்த ஜோடி காலணிகளை அன்புடன் எனக்கு அனுப்பினார். அவருக்கு நான் நன்றி தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உரையாடலின் போது தன்னை சகோதரன் என்று அழைக்கும்படி அவரை ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார்.