புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக முடிவெடுக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜ தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும் மூத்த பாஜ தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி சார்பில் வழக்கறிஞர் சத்யா சபர்வால் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,தான் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்றும் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்துள்ளதாக தானாக முன்வந்து கூறியுள்ளார். ராகுல் காந்தி இவ்வாறு பேசியது இந்திய அரசியல் சட்டத்தின் 9வது பிரிவுக்கு எதிரானது. இந்திய குடியுரிமை சட்டத்தின்படி அவர் இந்திய குடிமகன் என்ற தகுதியை இழந்து விட்டார்.
விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன். என்னுடைய புகாரின் நிலை பற்றி விளக்கம் அளிக்கும்படி கடிதம் எழுதியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. என்னுடைய புகார் குறித்து முடிவெடுக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.