சுல்தான்பூர்: கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக பேரவை தேர்தலின் போது ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பற்றி ராகுல் காந்தி ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார் என குற்றம் சாட்டி பாஜ பிரமுகர் விஜய் மிஸ்ரா சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2023ல் ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. அதன் பின் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி புகார்தாரரின் தரப்பு சாட்சி அனில் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் ராகுல்காந்தி தரப்பு வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா குறுக்கு விசாரணை நடத்தினார். சுல்தான்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் கமல் ஸ்ரீவஸ்தவா என்பவர் மரணமடைந்ததால் நேற்று விசாரணை நடைபெறவில்லை. இதனால் வழக்கின் விசாரணை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.