ஸ்ரீபெரும்புதூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதிவி பறிப்புக்கான மேல் முறையீடு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவகம் முன்பு சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர், ராகுல்காந்தியின் மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், காங்கிரஸ் கட்சியினரை அப்புறப்படுத்தினர். இதைதொடர்ந்து ராஜீவ்காந்தி நினைவகம் நுழைவாயில் முன்பு நின்று கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுராந்தகம்: ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மதுராந்தகம் அடுத்த படாளம் ஜங்ஷன் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் வேல்விழி தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட ஒருவர் திடீரென தேசிய நெடுஞ்சாலைக்கு ஓடிச் சென்று சாலை மறியல் செய்ய முயன்றபோது போலீசார் மடக்கி மடக்கிப் பிடித்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்ப ஏற்பட்டது. பாதுகாப்புக்காக அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்பு காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.