நெல்லை: ராகுல்காந்தி மீது அவதூறு பரப்பி வன்முறையை தூண்டும் எச்.ராஜா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை வேண்டுமென்று நெல்லை எஸ்பி அலுவலகத்தில் ராபர்ட் புரூஸ் எம்பி, ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று புகார் மனு அளித்தனர். பின்னர் இருவரும் அளித்த பேட்டி: தமிழகத்தைச் சேர்ந்த பாஜ தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ராகுல்காந்திக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஷிண்டே சேனா கட்சியின் சஞ்சய் கெய்க்வாட் எம்எல்ஏ ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பேன் என்று கூறி உள்ளார்.
மற்றொரு பாஜ தலைவர் தர்விந்தர் சிங் வர்மா இந்திராகாந்திக்கு ஏற்பட்ட நிலைதான் வரும் என பேசியுள்ளார். ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, உபி மாநில அமைச்சர் ரகுராஜ் ஆகியோர் ராகுல்காந்தியை பயங்கரவாதி என பேசியுள்ளனர். எனவே, இந்த 5 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்பியை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ராகுல்காந்தியை பார்த்து பாஜவினர் நடுங்குகின்றனர். பெரும்பான்மை இல்லாத பாஜ ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்காது. ராகுல்காந்தி விரைவில் பிரதமர் ஆவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.