புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமையை பெற்றவர் என்றும், இதற்காக அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தான் அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் நருலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொது நல வழக்காக தாக்கல் செய்தது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நேரில் ஆஜராகி வாதாடிய சுப்ரமணிய சாமி, ‘‘ராகுல் மக்கள் பிரதிநிதியாக இருப்பதால், இது அரசாங்கம் சம்மந்தப்பட்ட விஷயம். எனவே பொது நல வழக்காக தாக்கல் செய்துள்ளேன். எனது புகார் குறித்து ராகுலிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு புகாரின் நிலை குறித்து எந்த தகவலும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதி, பொது நல வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பாக இந்த வழக்கை வரும் 26ம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.