கயா: பீகார் மாநிலம் கயாவில் நடந்த ‘மகிளா சம்வாத்’ என்ற நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது ரியா பஸ்வான் என்ற இளம்பெண் எழுந்து நின்று, ‘உங்களைப் போலவே நானும் அரசியலுக்கு வந்து சேவை செய்ய விரும்புகிறேன். உங்களைப்பார்த்து தான் எனக்கு அரசியல் ஆசை வந்துள்ளது. உங்களைப் போலவே, நானும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க யோசித்து வருகிறேன். நானும் ஒரு தலைவராகி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கல்வி முதல் சுகாதாரம் வரையிலான துறைகளை மேம்படுத்த முடியும் என்பதால், நானும் அரசியலுக்கு வர விரும்புகிறேன்.
ஆனால் பெண்கள் அரசியலுக்கு வருவதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. அதேபோன்ற நபர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட சிந்தனையை கொண்டுள்ளேன்’ என்றார். ரியாவின் பேச்சை ரசித்து சிரித்த ராகுல்காந்தி,’ நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள்’ என்றார். இந்த பேச்சு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 2022 ஆம் ஆண்டு, ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ராவிடம் இலவச சானிட்டரி பேட்களை வழங்குவது குறித்து கேள்வி எழுப்பி புகழ்பெற்றவர் ரியா என்பது குறிப்பிடத்தக்கது.