புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது இடங்களுக்கு சென்று, டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரை சந்தித்து, அவர்களது பிரச்னையை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு இன்று ராகுல் காந்தி திடீரென சென்றார்.
அங்கு ரயில் நிலையத்தில் பணிபுரியும் (போர்ட்டர்கள்) சுமை தூக்கும் தொழிலாளிகளை சந்தித்து பேசினார். மேலும் அவர்களது குறைகள், குடும்ப சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளியின் உடையை அணிந்து கொண்டு பயணிகளின் உடைமைகளை சிறிது தூரம் தூக்கி சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.