புதுடெல்லி: ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க கோரி ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தன. அப்போது, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பின. ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்குமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதில், ‘நாக்பூர் டிவிஷனல் ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், காப்பீட்டு துறை தொடர்பான பிரச்னைகள் குறித்து ஒரு குறிப்பாணையை என்னிடம் அளித்துள்ளனர். அவர்கள் எழுப்பிய முக்கிய பிரச்னை, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெறுவது தொடர்பானது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் இரண்டுக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு சமம். வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை எனும் அபாயத்தை உணர்ந்த ஒரு நபர், இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு தனது குடும்பத்திற்கு சில பாதுகாப்பை வழங்குவதற்காக எடுக்கும் காப்பீடுக்கான பிரீமியத்திற்கு வரி விதிக்கப்பட கூடாது என ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் கருதுகிறது.
அதேபோல், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி, சமூகத்துக்கு அவசியமான இந்த பிரிவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. உடல்நல காப்பீட்டு பிரீமியங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு சிரமமாக இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெறுவதற்கான எனது ஆலோசனையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலியுங்கள்’ என்று கூறியிருந்தார். இதை வலியுறத்தி நாடாளுமன்றத்திலும் பலர் பேசினர்.
பல மாநில முதல்வர்களும், இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இந்நிலையில், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்குமாறு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.